×

தெளிவு பெறுஓம்: அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானை தங்கமாகுமா?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானை தங்கமாகுமா?
– வினோதினி, தேனி.

பதில்: 27 நாள்களுக்கு ஒரு நாள் அவிட்ட நட்சத்திரம் வருகிறது. அந்த அவிட்ட நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிறக்கிறார்கள். அத்தனை அவிட்ட நட்சத்திரக்காரர்களின் வீட்டுத் தவிட்டுப்பானைகள் தங்கமாகவா நிறைந்து இருக்கிறது. தாலிக்குக் கூட அரை கிராம் தங்கம் வாங்க முடியாமல் கடன் வாங்கித் தவித்த அவிட்ட நட்ஷத் திரகாரர்களை நான் அறிவேன்.

ஒரு பழமொழியில் மொத்த ஜோதிட சாத்திரமும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொண்டால், இம்மாதிரி பழமொழிகளுக்கு நாம் பெரிய அளவு மதிப்பு தர மாட்டோம். இது பரவாயில்லை. ஏதோ உற்சாகமாக நேர்மறையாக கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், சில பழமொழிகள் எதிர்மறையில் அல்லவா இருக்கிறது. ஆயில்யத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது. கேட்டையில் பிறந்தால் மூத்தாருக்கு ஆகாது. மூலத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது என்று சொல்லி பலருடைய வாழ்க்கையை இத்தகைய பழமொழிகள் கெடுத்துக் கொண்டிருக்கின்றனவே.

? தீபத்தை ஏற்றி வைத்து தீபத்தின் பக்கத்தில் உட்காரக் கூடாது என்று சொல்கிறார்களே?
– சுந்தர வடிவேல், வேலூர்.

பதில்: வேறு ஒன்றும் காரணம் இல்லை. நாம் தீபத்துக்கு பக்கத்தில் உட்கார்ந்தால் அதன் மீது சாயலாம். அல்லது நம்முடைய துணிமணிகள் அதன் மீது பட்டு விபத்து நேரலாம் அல்லது நம்முடைய மூச்சுக் காற் றினால் தீபம் அணையலாம். நம்முடைய கை, கால்கள் அசைக்கும் போது தீபம் கீழே விழலாம். தீபம் என்பது மங்கலகரமான காரியத்தைக் குறிக் கக்கூடிய ஒரு குறியீடு. இப்படிப்பட்ட விஷயங்கள் நடந்தால் அபசகுனமாக மனதுக்கு கஷ்டமாக இருக்கும் அல்லவா. அதனால் தான், ‘‘தள்ளி உட்கார்’’ என்றார்கள்.

? அசுரர்கள் தேவர்கள் என்றெல்லாம் நிஜமாகவே இருக்கின்றார்களா?
ஆதிநாராயண மூர்த்தி, சென்னை.

பதில்: இதெல்லாம் புராணங்களில் இருக்கின்றன. நாம் யாரும் நேரில் பார்த்ததில்லை ஆனால் அசுரர்கள் எந்த குணங்களோடு இருப்பார்கள்? தேவர்கள் எந்த குணங்களோடு இருப்பார்கள்? என்பதை நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.ஒருவன், ஆபத்தில் ஒரு உதவி செய்கின்றான் என்றால், அவனை “தேவன் போல் வந்து காப்பாற்றினான்” என்று சொல்கிறோம். அதே நேரத்திலே ஒருவனுடைய செயலால், மிகப் பெரிய ஆபத்து நேருகிறது என்றால், அசுரன் போல் வந்தான், ராட் சசன் போல் இடித்துவிட்டுச் சென்றான் என்று சொல்கிறோம் அல்லவா, இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால், குணத்தால் மட்டுமே ஒருவன் அசுரனாகவோ, தேவனாகவோ ஆகிறான்.

நல்லதைச் செய்தால் தேவனாக ஆகிறான். பொல்லாததைச் செய்தால் அசுரனாக மாறுகின்றான். அசுரனுக்கு பிள்ளையாகப் பிறந்தாலும் தன்னுடைய நடத்தையால் தேவன் ஆனவன் பிரகலாதன். இந்திரனுக்குப் பிள்ளையாக பிறந்தாலும், தன்னுடைய கெட்ட நடத்தையால் அசுரனானவன் ஜெயந்தன் என்கின்ற காகாசுரன்.

? ஒருவன் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் தவிப்பதற்கு என்ன காரணம்?
– வசந்தா ஸ்ரீ , கரூர்.

பதில்: இந்த சந்தேகம் மகாபாரதத்தில் திருதராஷ்டிரனுக்கும் வந்தது. விதுர நீதியில் இது சொல்லப்பட்டு இருக்கிறது. துரியோதனனின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. எப்பொழுது பார்த்தாலும் மனதில் பயம், பாண்டவர்கள் மறுபடியும் வந்து தன் பிள்ளைக்கு ஏதாவது செய்து விடுவார்களோ என்று ஒவ்வொரு நாளும் பயந்துகொண்டே இருந்தான். இரவு படுத்தால் தூக்கம் வருவதில்லை. ஒருநாள் அவன் இதற்குக் காரணம் கேட்க விதுரனை அழைத்தான். ‘‘உனக்கு தெரியாத நீதி இல்லை. சாஸ்திரம் இல்லை. நான் தூங்கினால் எனக்கு தூக்கம் வருவதில்லையே, என்ன காரணம்? நீ கண்டுபிடித்துச் சொல்” என்று சொல்ல விதுரன் பதில் சொல்லுகின்றான். “அண்ணா! ஒருவனுக்குத்
தூக்கம் வரவில்லை என்று சொன்னால் சில காரணங்கள் இருக்கின்றன.

உடம்பில் நோய் இருந்தால் தூக்கம் வராது. மற்றவனுடைய பொருளை அபகரிக்க நினைத்தால் தூக்கம் வராது. தவறான காரியங்கள், சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்பவர்களுக்கு தூக்கம் வராது. மற்ற பெண்களுடன் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு தூக்கம் வராது. இவ்வளவு தான் காரணம். இதில் உனக்கு எதனால் தூக்கம் வரவில்லை என்பதை நீயே தெரிந்து கொண்டு அதை சரி செய். தூக்கம் வந்துவிடும்” என்றார். நல்ல செயல்களை செய்தால் நல்ல தூக்கம் வரும்.

நல்ல தூக்கம் வந்தால் நோய் நொடிகள் இருக்காது. ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருந்தால் சிந்தனை தெளிவாக இருக்கும். சிந்தனை தெளிவாக இருந்தால் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

? கனவுகள் பற்றி நிறைய சொல்லுகின்றார்களே, கனவுகளுக்கும் பலன்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?
– பரமசிவன், திருநெல்வேலி.

பதில்: கனவுகள் என்பது நம்முடைய ஆழ்மனதில் எண்ணங்களை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவை என்று சொல்லுகின்றார்கள். ஆனாலும் கூட சொப்பன சாஸ்திரம் என்று கனவுகளின் பலன்கள் குறித்து மிகப் பெரிய ஆய்வுகள் நடத்தி சில விஷயங்களை சொல்லி இருக்கின்றார்கள். இந்த விஷயங்கள் பலர் வாழ்வில் நடந்திருப்பதால் இது உண்மைதான் என்று நினைக்கிறேன். சில விஷயங்களை சொல்லுகின்றேன்

1.கனவில் வெற்றிலை, கற்பூரம், சந்தனம் இவற்றையெல்லாம் பார்த்தால் செல்வம் அதிகரிக்கும். மாலை, பழம் இவற்றைப் பெறுவது போல் கனவு கண்டால் சுப நிகழ்வுகள், குறிப்பாக கல்யாணம் ஆகிவிடும். கறந்த நுரையுடன் கூடிய பாலைப் பருகுவது போல் கனவு கண்டால் விரைவில் செல்வந்தன் ஆகிவிடுவான்.

2.கனவில் மயிர்க் கூச்சம் ஏற்படுவது போல் வந்தால் பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

3.கோயில்களுக்கு சென்று தேவதைகளை வணங்குவது, அர்ச்சனை செய்வது போன்ற கனவுகள் வந்தால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும், செல்வாக்கு அதிகரிக்கும்,

4.தண்ணீரையோ, தயிரையோ, தாம்பூலத்தையோ, சந்தனத்தையோ ஜாதிப்பூ, மகிழம்பூ அல்லிப்பூ போன்றவற்றை கண்டால் பணவரவு உண்டாகும். பாம்பையோ தேளையோ அட்டையையோ பார்த்தால் அழிவற்ற செல்வத்தை பெறுவான். புத்திர சம்பத்தைப் பெறுவான்.

இரவில் படுக்கும் போது எம்பெருமானை மனதில் தியானம் செய்து கொண்டு படுக்க வேண்டும். அப்போது கெட்ட கனவுகள் வராது. எல்லோருக்கும் நல்ல சொப்பனங்களே வரும் என்று சொல்ல முடியாது. கெட்ட சொப்பனங்களைப் பார்த்தால், உடனே எழுந்து தண்ணீர் குடித்து, பகவானை தியானித்துக்கொண்டு
அமைதியாகத் தூங்க வேண்டும்.

? ஐம்புலன்களை கட்டுப்படுத்த வைராக்கியம் முக்கியம் என்கிறார்களே…?
– தீபா, நுங்கம்பாக்கம்.

பதில்: உண்மைதான். ‘‘பொறிவாயில் ஐந்தவித்தான்” என்பார் வள்ளுவர். ஆன் மீகத்தில் புலன்கள் கட்டுப்பாடு அவசியம். ஒரு கதை சொன்னால் உங்களுக்கு புரியும். ஒரு அரசன் இருந்தான் அவனிடம் ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது. அந்த ஆட்டுக்குட்டிக்கு யார் நிறைய உணவு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு பாதி ராஜ்யத்தை தருவேன் என்று சொன்னான். ஒவ்வொருவராக வந்தார்கள். அந்த ஆட்டைக் கொண்டு போய் மேய்ச்சலுக்கு விட்டார்கள். ஜாக்கிரதையாக மேய்ந்தது. அரசனிடம் சேர்த்தார்கள்.

இந்த ஆடு மிக நன்றாக சாப்பிட்டு இருக்கிறது என்று சொன்னவுடன், ஒரு புல் கட்டை அந்த ஆட்டுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டான் அரசன். ஆடு ஆசையோடு அந்த புல்கட்டை சாப்பிட்டது. அரசன் சொன்னான். ‘‘இது சரியாக சாப்பிட்டு இருந்தால், இப்பொழுது இந்த புல்கட்டை தொடாது அல்லவா. ஆகையினால் இது சரியாக மேயவில்லை. இதற்கு சரியான தீனியை நீங்கள் வழங்கவில்லை. நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.” என்று சொன்னான்.

இந்த விஷயத்தை ஒரு ஞானி பார்த்தார்’’ நான் இந்த ஆட்டுக்குட்டிக்கு வயிறு நிறைய ஆகாரத்தைத் தருகிறேன் என்று சொல்லி, வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார். நல்ல பசுமையான மேய்ச்சல் நிலம். ஆசையோடு மேயும் பொழுது ஒரு பெரிய குச்சியை எடுத்து ஆட்டுக்குட்டியை அடித்தார். அது எப்பொழுதெல்லாம் புல்லின் மீது வாயைவைக்குமோ அப்பொழுதெல்லாம் அடித்தார். சாயங்காலம் ஆட்டுக்குட்டியை கொண்டு வந்த அரசனிடம் விட்டார்.

‘‘அரசே, இந்த ஆட்டுக்குட்டி நிறைய தீனி சாப்பிட்டு இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் பரீட்சித்துப் பாருங்கள்.’’ அரசன் பார்த்தான். ஆடு இளைத்திருந்தது. உடனே ராஜா வழக்கம் போல் ஒரு புல் கட்டை கொண்டு வந்து ஆட்டுக்குட்டிக்கு முன்னால் போட்டதும், ஆட்டுக்குட்டி, ‘‘இதைச் சாப்பிட்டால் எங்கே அடி விழுமோ?’’ என்கிற உணர்வு வர பயந்து ஓடியது. ராஜா தோற்று விட்டான்.

சொன்னது போலவே அந்த ஞானிக்கு பாதி ராஜ்ஜியம் கொடுக்க முன்வந்தான். ஆனால் ஞானியோ, ‘‘உன் ராஜ்ஜியத்தை நீயே வைத்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இது ஒரு கதை போலத் தெரியும். ஆனால் இதில் ஒரு தத்துவம் இருக்கிறது.

நம்முடைய மனம் தான் இந்த ஆட்டுக்குட்டி. ஆசைகள் தான் மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல். நாம் என்னதான் விசய சுகங்களை அனுபவித்தாலும், மறுபடியும் ஒரு புல் கட்டு வைத்தால் சாப்பிட முனைவது போல, எத்தனை அனுபவித்தாலும், அடங்காத ஆசையோடு இருக்கின்றோம், ஆனால் வைராக்கியம் என்கின்ற குச்சியினாலே ஆசை அதிகரிக்கும் போது கட்டுப்படுத்தினால் அது ஒழுங்காக இருக்கும். இந்த ஆசைகளை எல்லாம் வைராக்கியத்தோடு வெல்ல வேண்டும்.

? கோபம், பாவம் என்று சொல்கிறார்களே, பாவத்திற்கும் கோபத்திற்கும் என்ன தொடர்பு? அதைக் கட்டுப்படுத்துவது எப்படி?
– சி.குணா, நாமக்கல்.

பதில்: சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்று பெரியவர்கள் சொல்லுகின்றார்கள் ஒரு சுள்ளி எரியும்பொழுது, தானும் எரிந்து அழிந்துவிடும். அதோடு தன்னோடு இணைந்த எந்தப் பொருளையும் அழித்துவிடும். கோபமும் அப்படித்தான். யார்மீது கோபப்படுகிறோமோ அவருக்கும் அது ஆபத்து. யார் கோபத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கும் அது பெரிய ஆபத்து. கோபம் எந்த நன்மையையும் செய்து விடுவதில்லை கோபத்தில் இருக்கும் பொழுது நம்முடைய ஹார்மோன்கள் சுரக்கக்கூடிய வேகமும், நம்முடைய ரத்த அழுத்தமும் பார்த்தால், நாமே நமக்கு சொந்தப் பணத்தில் சூனியம் வைத்துக் கொள்வது போல நமக்கு நாமே தீமையை செய்து கொள்ளுகிறோம் என்பது தெரியும்.

கோபம் பலவிதமான பாவச் செயல்களுக்குக் காரணமாகி விடுவதால் கோபத்தை பாவம் என்று சொன்னார்கள். அதைக் கட்டுப்படுத்த முடியும். உதாரணத்தைச் சொல்லுகின்றேன். நீங்கள் உங்களுக்கான ஒரு புகைப் படத்தை எடுக்கிறீர்கள். அப்பொழுது புகைப்படக்காரர் உங்களை சிரிக்கச் சொல்வார். காரணம் சிரித்தால் தான், சுமாராக இருக்கின்றவர்கள் கூட நன்றாக படத்தில் இருப்பார்கள், அதே நேரத்தில் நீங்கள் கோபத்தோடு இருக்கும் போது ஒரு படத்தை எடுத்து அதை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறீர்கள் என்பதை அந்த படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கோபத்தின் பின் விளைவுகளை சிந்தித்து கட்டுப்படுத்த வேண்டும்.

? நல்ல உணவைச் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெறலாம் என்று சொல்கின்றார்களே, ஆனால் சாதாரண உணவைச் சாப்பிடுபவர்களும் மிக நல்ல ஆரோக்கியத்துடன் தானே இருக்கின்றார்கள்?

– வாசு, நாகை.

பதில்: இதில் ஒரு முரண்பாடும் இல்லை. சத்துள்ள உணவைச் சாப்பிட்டால் அந்தச் சத்துக்கள் உடம்பில் சேரும். அதனால் ஆரோக்கியம் பெருகும் என்பது விஞ்ஞான பூர்வமாக உண்மைதான். உணவில் சத்து இருப்பது என்பது உண்மை.

ஆனால் அந்தச் சத்து நல்ல முறையில் செரித்து, நம்முடைய ரத்தத்தோடு கலந்து, அதன் பலனை நாம் முறையாக பெற வேண்டும் என்று சொன்னால் நல்ல உணவினால் மட்டும் கிடையாது. அந்த உணவை நாம் எந்த மனநிலையில் உட்கொள்ளுகிறோம் என்பதிலும் இருக்கிறது.

நீங்கள் பயத்தோடும், கவலையோடும், வெறுப்போடும், அழுகையோடும், கோபத்தோடும், எவ்வளவுதான் நல்ல உணவை உட்கொண்டாலும் அது விஷமாக மாறிவிடும். இந்த பயம், வெறுப்பு, கவலை இல்லாமல் இருக்கத்தான் ஆன்மிகம். நல்ல மனநிலையில் உட்கொள்ளும் சாதாரணமான ஆகாரம் கூட, நமக்கு பலத்தைத் தருகின்றது. அசாதாரணமான மனநிலையில் உட்கொள்ளும் உயர்ந்த உணவு கூட நமக்கு பயனில்லாமல் போய்விடுகிறது.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறுஓம்: அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானை தங்கமாகுமா? appeared first on Dinakaran.

Tags : Avita ,Abitat ,Vinothini ,Theni ,
× RELATED கார் டயர் வெடித்து விபத்து தாம்பரம் காவலர், மனைவியுடன் பலி: 4 பேர் படுகாயம்